உலக செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்வதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பெருமிதமடைகிறார். ராஜா, ராணிகளை வரவேற்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுகிறார். அப்படி என்ன தான் ஸ்பெஷல் ஒலிம்பியாட் செஸ் விளையாட்டில்... விவரிக்கிறது.
"செஸ் விளையாட்டின் மெக்கா சென்னை" என வர்ணிக்கும் வாக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பியாட் செஸ் போட்டி இந்த ஆண்டு 44 வது முறையாக நடத்தப்படுகிறது. மாஸ்கோவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் உக்ரைன் - ரஷ்யா போரால் போட்டிகளை சென்னையில் நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரை வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போட்டி ஜூலை 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு மிகப்பெரிய செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார். உலக சாம்பியன் கார்ல்ஸன் உட்பட உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர். தங்களுக்காக அல்லாமல் தேசத்திற்காக நடத்தப்படும் இந்தத் தொடரில் இந்தா உட்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ராஜா, ராணிகளை வரவேற்கிறோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். உலக செஸ் ஒலிம்பியாட் தொடர் என்பது நாடுகளுக்கிடையே நடைபெறும் அணி விளையாட்டு போட்டியாகும். இந்த ஆண்டு போட்டியை இந்தியா நடத்துவதால் மூன்று அணிகளாக இந்திய அணி களமிறங்குகிறது. 1927 ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி இதுவரை 1 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் கடந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற்ற ஒலிம்பியாட் தொடரில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸால் விளையாட்டு உலகமே முடங்கியிருந்தாலும் செஸ் ஒலிம்பியாட் தொடர் மட்டும் ஆன்லைனில் உயிர்ப்புடன் விளையாடப்பட்டது.
கொரோனாவையே வீழ்த்திய உலக ஒலிம்பியாட் செஸ் எனப்படும் மௌன யுத்தம் தமிழகத்தில் நடைபெறுவது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் திருவிழா உணர்வை தூண்டியுள்ளது.
Comments
Post a Comment